Tuesday 13 September 2016

கோளறு பதிகம்


கோளறு திருப்பதிகம் – திருமறைக்காடு
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்
திருமுறை : இரண்டாம் திருமுறை (85 வது திருப்பதிகம்)
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
கிரகதோஷங்கள் நீங்கவும் நீங்க ஓத வேண்டிய திருப்பதிகம்.
திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு நீங்கப் பாடிய கோளறு பதிகம்.
ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று. அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது. சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த போது சிவ சமயத்தை மீட்டெடுக்க பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும். என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி – ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள்.
அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார். அப்போது, அப்பர் சுவாமிகள் – இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. – என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள். மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி – திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம் இது.
பாடல் எண் : 01

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே 

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
எம்பெருமான் மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு இருக்கும் அவன் களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவ சிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்.
பாடல் எண் : 02

என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம் 

அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி , பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், ஒன்பதாவது விண்மீனாய் வரும் ஆயில்யம், ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம், ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம், பதினெட்டாவது விண்மீனான கேட்டை, ஆறாவது விண்மீனான திருவாதிரை, முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்.
பாடல் எண் : 03
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை, திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள், துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும். அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும்.
பாடல் எண் : 04

மதிநுதன் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
பிறை போன்ற நுதலை உடைய உமையம்மையாரோடு ஆலின் கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை, கொன்றை மாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால், சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். அடியவர்களுக்கும்  மிகவும் நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 05

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் 

வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும் 
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னி மலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 06

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் 
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் 
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும்(வாள் – வரி – அதள் – அது – ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலை யானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 07

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறி வரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச் சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர் காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம், அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 08

வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் 
உடனாய் வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த 
அதனால் ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 09

பல பல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும், உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது கங்கை, எருக்க மலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரை மலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால் 

புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே 
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
பாடல் விளக்கம்
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள் புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும்.
பாடல் எண் : 11

தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் 
எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் 
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
பாடல் விளக்கம்
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும், கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும் செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன் முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

Thursday 8 September 2016

நவக்கிரகக் கோயில்கள்

  1. சூரியனார் கோவில்- சூரியன்


  2. திங்களூர் கைலாசநாதர் கோயில் - சந்திரன்

3.சீர்காழி வைத்தீசுவரன் கோயில் - செவ்வாய்
.
4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - புதன்

5.ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - குரு


6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்- சுக்கிரன்


7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - சனி



8. திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் - ராகு



9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் - கேது



10. பாடி திருவல்லீஸ்வரர்  கோயில் - குரு



Wednesday 15 June 2016

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்



ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ளவேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும்பெம்மானின்கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன்என்பது வெளிப்படைஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும்நாம் செய்யவேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கைஎம் தலையை பலவாக கொய்தாலும்பயம் கொள்ளோம்எம் தலைவன்,முதல்வன்,இறைவன்,உயிர்,ஊன்அனைத்துமானவன் இருகின்றான் என்ற நம்பிக்கைமரணம் எவ்வழியில்வந்தாயினும் யாம் எவ்வாறு கொல்லபடினும் எம்மை ஆட்கொள்ள பெம்மான்இருகின்றார் என்ற நம்பிக்கைபயம் பூஜ்யமாக வேண்டும் என்றார் வள்ளலார்பெருமான் என்பர்எவ்வாறு பயத்தை  பூஜ்யம் ஆக்குவதுயாரிடமும் கேட்கவேண்டாம்தங்களுக்குளே எவ்வாறு என்று கேட்டு கொள்வோம்எல்லாமாய் இருந்துஇயக்கும் எம்பெரும்மான் திருவடி தோன்றின் வேறு விளக்கம் யாரும் கூறவேண்டுமோசிவ சிவ ! சிவ சிவ ! சிவ சிவ !

நமக்காக திருநாவுக்கரச பெருமான் அருளிய  பாடல் வரிகளை பார்த்தால் தெளிவு கொள்ளலாம்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும், துன்பமில்லை.



எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.

Tuesday 5 January 2016

சிறப்பு வாய்ந்த சிவாலயங்கள் ஒரு பார்வை.....

பெரியகோயில் என்று சொல்வதற்குக் காரணம்

1. பெரிய நிலப்பரப்பு
2. வானளாவிய கோபுரங்கள்
3. பெரிய திருச்சுற்றுக்கள்
4. பெரிய மதில்கள்
5. பெரிய திருக்குளங்கள்
6. உயர்ந்த பெரிய வாயில்கள்
7. உட்கோயில்களும் பெரிய அமைப்பினை உடையன
8. பெரிய திருஉருவங்கள்
9. பெரிய வாகனங்கள்
10. பெரிய திருவிழாக்கள்...
பெரிய சிவன் கோயில்கள்.....

1. தில்லைத் திருக்கோயில்
2. மதுரை சுந்தரேசுவரர் கோயில்
3. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்
4. இராமேசுவரம் இராமநாதர் கோயில்
5. திருவானைக்கா ஜம்புகேசுவர்ர் கோயில்
6. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
7. கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்
8. தஞ்சை பிரகதீசுவரர் கோயில்
9. சீர்காழி பிரமபுரீசுவரர் கோயில்
10. திருவையாறு ஐயாறப்பர் கோயில்
11. திருவாரூர் வன்மீகநாதர் கோயில்
12. திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் கோயில்.
மதுரை ஆலயம்.....
இருபத்தைந்து மகேசுவர மூர்த்தங்களை ஒரு சேரக் காணக் கூடிய இடமாக மதுரை ஆலயம் மட்டுமே உள்ளது எனலாம். மதுரை சொக்கநாதர் திருமுன்புள்ள நந்தி மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள பெருந்தூண்களில் இவ்விருபத்தைந்து திருவுருவங்களும் அமைந்துள்ளன.
மலைக்கோவில்கள்....
பொதுவாக மலைக்கோவில்கள் முருகனுக்கும் திருமாலுக்கும் தான் உண்டு. ஆனால் திருக்கழுக்குன்றம், திருச்செங்கோடு, திருக்காளத்தி, மகாதேவமலை ஆகியவைகள் எல்லாம் சிவபெருமானுக்குரிய கோவில்கள். விநாயகருக்குத் திருச்சி மலைக் கோட்டையில் உச்சிப்பிள்ளையார் எனும் திருநாமம் உண்டு.
விமானத்தில் அறுபத்து மூவர்...
தஞ்சை மாவட்ட தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் விமானத்தைச் சுற்றிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றுப் பகுதிகள் சிற்பமாக அமைந்துள்ளன.
வைப்புக் கோயில்....

தேவாரப் பதிகம் பெறாமல் தேவாரம் பாடிய எவராலும் பதிகம் பாடிப் போற்றப் பெறாமல் தேவாரப் பாசுரங்களில் பாட்டுக்களின் பெயர் மட்டுமே குறிக்கப் பெற்ற தலங்கள் ஆகும். வைப்புத் தலக்கோயில்கள் 280 உள்ளன.
பாடல் பெற்ற கோயில்கள்....
அப்பர் சம்பந்தர், சுந்தரர் தனித்தோ இணைந்தோ பதிகம் பாடிய கோயில்கள் பாடல் பெற்ற கோயில்கள் இவை தேவாரம் பெற்ற கோயில்கள் என்பர். இவற்றின் எண்ணிக்கை 247. திருப்புகழ் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 106.
கோயில்
இந்தியாவிலேயே கோயில்கள் தமிழ்நாட்டில்தான் மிகுதி மொத்தக் கோயில்கள் 24,605 (சிவனுக்கு 10,033 பெருமாளுக்கு 4,226, இதர 10.346.
கொடி மரம், நந்தி, பலி பீடம் இல்லை
திருப் பெருந்துறை ஆவுடையார் கோயிலில் ஏனைய சிவாயங்களைப் போல் கொடிமரம், நந்தி, பலி பீடம் இல்லை, இதற்குரிய காரணம் இது. யோகசித்தியால் அகங்கார மகாரங்கள் பலியாகி, பசுபோதமும் விலகியபக்குவ ஆன் மாக்கள் முத்திபேறு பெறுவதற்கான அத்வைதத் தலம் திருப்பெருந்துறை.
சிற்பிகள் உறுதி மொழி...
கோயில் திருப்பணி செய்யும் சிற்பாசாரி யர்கள் வேலை ஒப்பந்தம் செய்யும் போது ஆவுடையார் கோயில் சிற்ப வேலைகள் புற நீங்கலாக எனக் குறிப்பிடுவர். ஏனெனில் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் சிற்பங்களுக்கு நிகராக வேறு எங்கும் இல்லை.
லிங்கத்தின் பின்னால் சிவன்...
திருவீழிமிழலையில் நேத்திரார்ப்பணேசுவர சுவாமி லிங்கத் திருமேனியின் பின்னால் பார்வதி பரமேச்வர்ர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். சாதாரணமாக சிவாலயக் கருவறையில் காணமுடியாத சிறப்பு இது.
மரகதலிங்கம்...
திருநாள்ளாறு திருத்தலத்தில் தியாகராசப் பெருமாள் சன்னதியில் சாதிபச்சை இரத்தினத்திலான சிவலிங்கம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள இதற்கு ஐந்து கால அபிடேக ஆராதனை நடைபெறகிறது...
நடராசர் அபிடேகங்கள்..
சித்திரை திருவோணம் உச்சிக்காலம் முற்பகல் 10 மணிக்கு மேல் பிற்பகல் 2 மணிக்குள், ஆனி உத்திரம் பிரதோசக் காலம் மாலை 4,30 இரவு 7க்குள்,
ஆவணி வளர்பிறை மாலைச்சந்தி மாலை 6 முதல் இரவு 8க்குள் சதுர்த்தசி புரட்டாசி வளர்பிறை அர்த்தயாமம் இரவு 9.30 முதல் 11 க்குள் சதுர்த்தசிமார்கழி திருவாதிரை உசத்காலம் அதிகாலை 3,00 க்கு மேல் 6,00க்குள். மாசி வளர்பிறை காலை சந்தி காலை 6,00 முதல் 9,00க்குள்
சதுர்த்தசி பகல் அபிடேகங்களுக்கு மாலையும், இரவு அபிடேகங்களுக்கு மறுநாள் உதயமும் தரிசன காலமாகும். தில்லையில் நடராசரே மூலவரும் உற்சவருமாவார்.
மரகத நடராச வடிவம்...
திருஉத்தரகோச மங்கை நடராசர் மரகதத்தாலாய திருமேனி, எனவே எப்போதும் சந்தனக்காப்புக்குள் மறைந்திருப்பார் திருவாதிரை ஒருநாளில் மட்டும் சந்தனக்காப்பு மாற்றிப் புதுச் சந்தனக்காப்பு சாத்தப் பெறும்.
ஆண்பெண்ணாக உலா
திருவானைக்காவில் பங்குனி மாதம் நடைபெறும் பஞ்சப்பிரகார திருவிழாவில் இறைவன் பெண் வேடத்திலும் இறைவி ஆண்வேடத்திலும் திருவீதி உலா வருகிறார்கள்
.
தமிழகத்தில் முதல் நடராசர் சிற்பம்..
தமிழகத்தில் பல்லவர்காலத்தில் சீயமங்கலத்தில் உள்ள குகைக் கோயில் தூணில் உள்ள சிற்பம் ஆடல் தாண்டவச் சிற்பத்தின் முன்னோடி என்பர். காஞ்சிகைலாச நாதர் கோயிலில் ஊர்த்துவ தாண்டவர் சிற்பம் உள்ளது. சங்கர தாண்டவர் சிற்பம் ஒன்றும் கருவறைக்கு வெளியே உள்ளது.
தட்சிணாமூர்த்தி....
எல்லாச் சிவன் கோவில்களிலும் மூலவருடைய கருவறைக்கு வெளியே தென்பக்கத்தில் தட்சிணா மூர்த்தியைக் காணலாம். ஆனால் காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் மட்டும் தட்சிணாமூர்த்தி இல்லை காஞ்சிக்குப் பத்துக் கல் தொலைவில் சிறிய ஊரில் இக்கோயிலுக்குரிய தட்சிணாமூர்த்தி தனிக்கோவில் கொண்டுள்ளார்.
சிவன் மானுட வடிவங்கள்...
அடியவர்கட்கு அருள்புரிந்து ஆட்கொள்ளச் சிவன் வேண்டி மானுடச் சட்டை தாங்கி மேற்கொண்ட மானுட வடிவங்களைச் சேக்கிழாரும் பரஞ்சோதியாரும் சித்தரித்துக் காட்டியுள்ளனர்.
பெரிய புராணம் காட்டும் வடிவங்கள் -- 15
பெரிய புராணத்துள் சிவபெருமான் சுந்தரருக்காக மேற்கொண்ட மானுட வடிவங்கள் ஆறாகும். அவையவான..
1. தடுத்தாட் கொள்ள வந்த முதிய அந்தணர் வடிவம்
2. திருவதிகையில் திருவடி சூட்ட மேற்கொண்ட முதிய அந்தணர் வடிவம்.
3. திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர் கோலம்.
4. திருக்குருகாவூரில் தண்ணீரும் பொதிசோறும் அளிக்க வந்த மறைவேதியர் கோலம்.
5. திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுக்க அந்தணர் கோலம் 6. பரவையார் ஊடலைத் தவிர்க்க மேற்கொண்ட ஆதிசைவர் வடிவம்‘
அதுபோலத் திருநாவுக்கரசருக்காகச் சிவன் மேற்கொண்ட மானுட வடிவங்கள் இரண்டு.
1. திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளிக்க மேற்கொண்ட அந்தணர் வடிவம்.
2. பனிபடர்ந்து இமயமலையின்கண் அப்பருக்கருள மேற்கொண்ட மாமுனி வடிவம்.
இவற்றைத் தவிர ஏனைய ஏழு மானுட வடிவங்கள் ஏழு நாயன் மார்கட்காக மேற்கொள்ளப் பெற்றவையாகும்.
1. திருநீலகண்ட நாயனாருக்கருள மேற்கொண்ட சிவ யோகியார் வடிவம்.
2. இயற்பகை நாயனாரைச் சோதிக்க மேற்கொண்ட தூர்த்த வேடம்
3. இளையான்குடிமாறநாயனாரை உய்விக்க வந்த அடியார் வேடம்
4. அமர்நீதி நாயனாரை மேற்கொள்ள வந்த பிரமச்சாரி வடிவம்.
5. மானக்கஞ்சாற நாயனாருக்காக மேற்கொண்ட மாவிரதியார் வடிவம்.
6. திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காகக் கொண்ட அருந்தவ வேடம்.
7. சிறுத்தொண்ட நாயனாருக்காக மேற்கொண்ட பயிரவ வேடம்.
திருவிளையாடற் புராண மானுட வடிவங்கள் -- 24..
திருவிளையாடற் புராணத்துள் சிவன் மேற்கொண்ட இருபத்து நான்கு மானிட வடிவங்களைப் பரஞ்சோதியார் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றுள்
வேட வடிவம் நான்கு
புலவர் வடிவம் நான்கு
சித்தர் வேடம் மூன்று
குரு வேடம் மூன்று
வாணியச்செட்டி வேடம் மூன்று
குதிரைச் சேவகன் வேடம் இரண்டு
ஏனையவை ஒன்று ஒன்று ஆகும்...
புலவர் வேடம் நான்கு..
1. புலவர் வடிவாகி இசைவாதில் தீர்ப்பு கூறுதல்
2. புலவராகிப் புலவர்களை அழைத்துச் செல்லுதல்
3. புலவராகி உருத்திர சன்மன் பிறப்பு பற்றிக் கூறுதல்
4. புலவராகி புலவர் தருமிக்குப் பாடல் அருளுதல்
வேடுவ வேடம் நான்கு
1. வேட்டுவ வடிவில் வீரனாக யானையை எய்தமை
2. வேடன் வேட்டுவச்சியாக மாபாதகம் தீர்த்தமை
3. வேட வடிவு கொண்டு வேலாயித்த்துடன் சோழனை வென்றமை
4. வேட வடிவொடு சுந்தரப் பேரம்பெய்திமை..
சித்தர் வேடம் மூன்று..
1. எல்லாம் வல்ல சித்த வடிவம் கொண்டமை
2. சித்தர் வேடம் கொண்டு வைகையை வற்றச் செய்தமை
3. சித்தர் வேடத்துடன் பொன்னனையாள் இல்லம் சென்றமை
குரு/ ஆச்சார்ய வேடம் மூன்று

1. பதினாறு வயது அந்தணராகக் கண்ணுவர் அரதத்தருக்கு வேதப் பொருளை அருளியமை
2. ஆச்சார்ய வேடம் கொண்ட இயக்கிமாருக்கு அருளல்
3. ஞானாசிரியர் வடிவு கொண்டு மணிவாசகருக்கு அருளல்
வாணிக வடிவம் மூன்று
1. வைசியர் வேடம் கொண்டு மாணிக்கம் விற்றமை
2. வளையல் விற்கும் வணிகராக வளையல் விற்றமை
3. தளபதி செட்டியராக மாமனாகி வழக்குரத்தமை
குதிரைச் சேவக வடிவம் இரண்டு
1. குதிரைச் சேவகனாகி மெய்க்காட்டிட்டமை
2. மணிவாசகருக்காகச் குதிரைச் சேவகனாகி நரி பரியாக்கியமை
ஏனைய வடிவங்கள்

1. வாள் ஆசிரியராக அங்கம் வெட்டியமை
2. தவசியாகத் தண்ணீர்ப் பந்தல் வைத்தமை
3. விறகு வெட்டியாக விறக விற்றமை
4. வலைஞராகி மீன்வலை வீசியமை
5. மண் சுமக்கும் கூலியாளாய் மண் சுமந்தமை
பன்றி வடிவம்
இம்மானுட வடிவங்களைத் தவிர பன்றிக் குட்டிகளின் துயர் நீக்க இறைவன் தாய்ப்பன்றி வடிவேற்றுப் பாலளித்த வடிவமும் பரஞ்சோதியாரால் குறிப்பிடப் பெற்றுள்ளது.
சிவன் விடங்க வடிவம்
உளியால் செதுக்கப் பெறாமல் தானே உண்டாகும் சுயம்பு வடிவம் விடங்க வடிவம் எனப்பெறும். சிவபெருமான் விடங்க வடிவங்கள் காணப்பெறும் தேவாரத் திருத்தலங்களான திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு, திருநள்ளாறு ஆகியவற்றைச் சப்தவிடங்கத் தலங்கள் என்று கூறுவர். இவற்றுள் திருவாரூர் நாகை இரண்டை மட்டும் விடங்கத் தலங்களாகக் குறிப்பிட்டுள்ள தேவார ஆசிரியர்கள் கூடுதலான விடங்கத் தலங்களாகத் திருப்பைஞ்ஞீலி, திருவெண்காடு, திருக்கயிலை, திருக்கலயநல்லூர் ஆகிய தலங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

சிவன் விகிர்த வடிவம்
ஒன்றுக் கொன்று எதிர்மறையாய் முரண்பட்டு வேறாயும் உடனாயும் நிற்கும் சிவ வடிவம் விகிர்த வடிவம் எனப்பெறும். வேறும் உடனுமாம் விகிர்தர் அவர் என்பார் ஞானசம்பந்தர். காலத்தால் அழியாத காலத்தைக் கடந்த அனைத்துமான சிவன் பேரியல்புகளை விளக்குவன இவ்விகிர்த வடிவங்களாகும்.
ஒருவன் பலவுருவன் 1--13--2,
ஆனொடு பெண் அலியல்லர் ஆனார் 6--73--3,
உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி 6--6--6
அந்தமும் ஆதியும் 1--39--1
இல்லான் உள்ளான் 6--11--3
நுண்ணியர் மிகப் பெரியர் 1--61--6
அகத்தினர் புறத்தினர் 3--83--8
என்பன போன்ற தேவாரத் தொடர்கள் சிவன் விகிர்த வடிவினை விளக்குவனவாகும்.
சிவபெருமான் ஓவியங்கள்...
சிவபெருமான் நடமாடும் பஞ்சசபைகளில் ஒன்றாகத் திருக்குற்றாலம் சித்திரசபை குறிப்பிடப்படுகின்றது.
தில்லைத் திருமூலநாதர் கோயில் ஓவியங்கள்
சிவபெருமானுடைய இருபத்தைந்து மகேஸ்வர வடிவ ஓவியங்கள் தில்லைப் பெருங்கோயிலில் திருமூலட்டானர் சன்னதியின் வெளிச்சுற்றுச் சுவரில் அழகிய வண்ண ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.
திருப்புடைமருதூர்க் கோயில் ஓவியங்கள்...
ஐந்து நிலைக் கோபுரத்தினை உடையது இக்கோயில். முதலாவது அடுக்கில் திருஞானசம்பந்தர் புரிந்த திருவிளையாடல்களும், இரண்டாவது அடுக்கில் நடராசர் வடிவமும், மூன்றாவது அடுக்கில் மீனாட்சி சுந்தரேசர் திருமணக் காட்சியும், நான்காவது அடுக்கில் கந்தபுராணக் காட்சிகளும், ஐந்தவாது அடுக்கில் காளியின் நடனமும் அர்த்த நாரீஸ்வரக் கோலமும் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

மதுரைத் திருகோயில் ஓவியங்கள்
மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயிலில் பொற்றாமரைக் குளத்தின் வடக்குப் புறச்சுவரில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைக் குறிக்கும் ஓவியங்கள் காணப்பெறுகின்றன.
காஞ்சி கைலாச நாதர் ஓவியங்கள்
இராச்சிம்மப் பல்லவன் காலத்தியதாகக் கருதப்பெறும் காஞ்சி கைலாச நாதர் கோயில் ஓவியங்கள் சிதைவு பெற்றிருப்பினும், இங்கு காணப்பெறும் சோமஸ்கந்தர் வரை கோட்டு ஓவியம் குறிப்பிடத்தக்கதாகும்...
பனைமலை சிவன் கோயில் ஓவியங்கள்

தென்னாற்காடு மாவட்டம் பனைமலை சிவன் கோயிலின் உட்புறச் சுவரில் நடராசர் வடிவமும சிவகாமியம்மையின் வடிவமும் சிறந்த ஓவியங்களாகக் காணப்பெறுகின்றன.
சீர்காழிக் கோயில் சிவன் ஓவியங்கள்..
திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த சீர்காழிக்குப் பன்னிரு பெயர்கள் உண்டு. அப்பன்னிரு பெயர்களுக்குரிய புராண நிகழ்ச்சிகள் இக்கோயிலில் உள்ள சம்பந்தர் கோயில் உட்சுவரின் வலப்பக்கத்தில் ஓவியங்களாகச் சித்தரிக்கப் பெற்றுள்ளன. அவ்வோவியங்களாவன.
1. பிரமபுரம் -- படைப்புக் கடவுளான பிரமதேவன் வழிபட்டமை
2. வேணுபுரம் -- அறைவன் மூங்கில் வடிவில் தோன்றி அருளியமை.
3. புகலி -- அசுர்ர்களால் அல்லலுற்ற தேவர்கட்குப் புகலிடமானவை.
4. வெங்குரு -- தேவகுருவான வியாழன் வழிபட்டமை.
5. தோணிபுரம் -- பிரளய காலத்தில் ஈசன் தோணியின் மீதமர்ந்து தோணியப்பராய்க் காட்சி தந்தமை.
6. பூந்தராய் -- பூமியைப் பிளந்த இரண்யாக்கதனை வதைத்த திருமாலின் வராகவதார வடிவம் சிவனைப் பூசித்தமை.
7. சிரபுரம் -- நவக்கிரகங்களில் ஒன்றான இராகுக் கிரகம் சிவனைப் பூசித்தமை.
8. புறவம் -- புறாவடிவில் வந்த அக்னி தேவனால் சிபிச்சக்கரவர்த்தி இத்தலத்தில் முத்தி பெற்றமை.
9. சண்பை -- சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தன் குலத்தினரால் தனக்கு நேர்ந்த பழியானது பற்றாமல் இருக்க்க் கண்ணன் வழிபட்டமை.
10. காழி -- காளி வழிபட்டமை.
11. கொச்சைவயம் -- மச்சகந்தியை விரும்பிய பழிச்சொல் நீங்கப் பராசரர் வழிபட்டமை.
12. கழுமலம் -- மும்மலங்கள் விலகும் வண்ணம் உரோமச முனிவர் வழிபட்டமை.


தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள்..
தஞ்சைப் பெரிய கோயில் கருவறையின் மேற்புற உட்சுவர்களில் தாருகாவனக் காட்சியும், எட்டுக்கைகளையுடைய பைரவர் கோலமும், நாய் வாகனமும் வரையப் பெற்றுள்ளன. தட்சணாமூர்த்தி ஓவியம். சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாளுடன் கயிலைக்குச் செல்லும் காட்சி, முப்புரம் எரித்த கடவுள் வடிவம், இராவணன் கயிலையை எடுக்கும் காட்சி ஆகியன சிறப்பான ஓவியங்களாக இங்கு இடம் பெற்றுள்ளன.
திருவண்ணாமலை எழுத்து மண்டப ஓவியங்கள்
திருவண்ணாமலை மலைப்பாதையில் காணப்பெறும் கிருஷ்ண தேவராயன் மண்டவத்தில் காணப்பெறும் நான்கு புராண ஓவியங்களில் சிவன் உமை திருமணக் காட்சி ஒவியம் இடம் பெற்றுள்ளது. மற்றொன்றில் முருகன் வள்ளி திருமணக் காட்சி இடம் பெற்றுள்ளது.
திருவாரூர் ஓவியங்கள்
திருவாரூர்க் கோயில் தேவாசிரிய மண்டபத்தில் முசுகுந்த மன்னன்
தியாகராசர் திருவுருவைப் பெற்றுக் கொள்ளும் ஓவியம் காணப்பெறுகின்றது.
இவை தவிரத் தற்காலக் கோயில் திருப்பணியாளர்கள் தற்காலத்தைய புதிய வண்ணங்களைக் கொண்டு பல அழகிய ஓவியங்களைத் தற்போது வரைந்துள்ளமை கண்டு மகிழத் தக்கதாகும்....



கோபுரத்தை விட உயர்ந்த விமானம்...
1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்
விஷேச ஸ்தலங்கள்.
1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்
பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.
1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
காசிக்கு சமமான ஸ்தலம்.
1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்
தருமநூல்கள் 18.
கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.
1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.
பாரதத்தின் முக்தி ஸ்தலம்.
1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.
பாரதமே பரமசிவம்.
1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.
முக்தி தரும் ஸ்தலங்கள்.
திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.
ஐந்து அற்புதங்கள்.
1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி 6, இராமேஸ்வரம் 3-ம் நீளபிரகாரம்.
திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}
காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.
12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.
பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.
திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.
பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}
சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.
பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.
1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய
{மேலாலம் சிவயநம மேவும் பொன் வெள்ளி பாலாம. சிவ சிவ..

Tuesday 19 May 2015

திருமுல்லைவாயில் ( வட திருமுல்லைவாயில் )

ஸ்ரீ துரையப்ப சாஸ்தா துணை

திருமுல்லைவாயில்
( வட திருமுல்லைவாயில் )


     தமிழ்  நாட்டில் 274 பாடல் பெற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்கள், அப்பர் , சுந்தரர் , சம்பந்தர், மணிக்கவாசகர் போன்ற சமய குறவர்களால் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் ஒன்று சென்னயில் உள்ள திருமுல்லைவாயில் சிவ ஸ்தலம்.

     இத்திருக்கோயில் தொண்டை நாட்டுத் தலமாகும் . சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில்   தென்   திருமுல்லைவாயில் உள்ளதால்   இது   வடதிருமுல்லைவாயில்   எனப்படுகிறது. (1) சென்னை- ஆவடி சாலையில் திருமுல்லைவாயில்  உள்ளது. (2)   பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயில் அடையலாம். சாலையில் இறங்கி ஊருள் 1 கி.மீ. சென்று கோயிலை அடையலாம். தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் பெயருடையது.

இத்தலம் பற்றிய வரலாறு :
     இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டுவந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் ; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர்.

     (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு) பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்.)



     இவர்களைக்காணத் தொண்டைமான் வந்தான். வரும் வழியில் கோழம்பேடுஎன்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்றறிந்துமன்னன் மறுநாள் காலை யானை மீதேறிவந்தான். அவன் வருவதைக்கண்ட அசுரர்களின் குறுநில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர்செய்வதற்குச் சேனைகளைக்கொண்டு வரத்திரும்பினான். அவ்வாறு திரும்பி இம் முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப்

பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது இறைவன் காட்சி தந்து,

மன்னனே ! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான்
மாசு இல்லா மணியே ! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிபெற்று வருவாயாக 
என்று அருள் புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்குநோக்கியுள்ளது). தொண்டைமான்
(நந்தியெம்பெருமானுடன்) வருவதை யறிந்து, ஓணன், காந்தன் 
சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்
தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவும்,பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப் பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.


திருமுல்லைவாயில் பாடல் - 1



திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்

சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய
பாசுப தாபரஞ் சுடரே


திருமுல்லைவாயில் பாடல் – 1 – விளக்கம்

தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, வீட்டின்பமும், அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும், இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாது, அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும், அவர்கள் என்னைப் பற்றவரின், பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் - 2

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 2 – விளக்கம்

உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, 'இறைவனே, நீ எங்குள்ளாய்?' என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய். 

திருமுல்லைவாயில் பாடல் - 3

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.


திருமுல்லைவாயில் பாடல் – 3 – விளக்கம்

விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே, சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக் திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.



திருமுல்லைவாயில் பாடல் – 4

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 4 – விளக்கம்


பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில், புள்ளிகளையும், கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு, அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 5

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

திருமுல்லைவாயில் பாடல் – 5 – விளக்கம்

சந்தன மரத்தின் வேரையும், கரிய அகிலினது கட்டையினையும், மென்மையான மயில் இறகினையும், யானையின் தந்தத்தையும், முத்துக் குவியல்களையும், பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும், பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, மாசில்லாத மணி போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.



திருமுல்லைவாயில் பாடல் – 6

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய
பாசுப தாபரஞ் சுடரே.


திருமுல்லைவாயில் பாடல் – 6 – விளக்கம்


மாற்றாது வழங்கும் வள்ளலே, வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே, திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, யான் பொய்யையே பேசி, குற்றங்களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின், யான் பெற்ற பேறு, மற்று யார் பெற வல்லார்! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன்; அது, தவறுடைத்தே. ஆயினும், அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின், அடியேன் வேறொரு துணை இல்லேன்; ஆதலின், அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய்.
திருமுல்லைவாயில் பாடல் – 7

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல்அ றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.


திருமுல்லைவாயில் பாடல் – 7 – விளக்கம்

அழகு பொருந்திய சிவந்த வாயினையும், வெள்ளிய பற்களையும், கரிய நீண்ட கூந்தலையும், சிறந்த மயில் போலும் சாயலையும், அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும், அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


திருமுல்லைவாயில் பாடல் – 8

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் றன்னைஆட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 8 – விளக்கம்

யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திருவெண்ணெய்நல்லூரில் வந்து, நாய்போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட சம்புவே, வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற, பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட, பசிய பொன்போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 9



மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய
பாசுப தாபரஞ் சுடரே.





திருமுல்லைவாயில் பாடல் – 9 – விளக்கம்

தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல், அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை, அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே, செல்வத்தையுடைய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே, சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 10

சொல்லரும் புகழான் தொண்டை மான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 10 – விளக்கம்
சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய, 'தொண்டைமான்' என்னும் அரசன், எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை, படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து, பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெள்ளை விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 11 – விளக்கம்

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற
செல்வனை நாவல் ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.


திருமுல்லைவாயில் பாடல் – 11 – விளக்கம்

நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல்

 இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி, அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய, அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும், மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள், நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர்.