Tuesday 19 May 2015

திருமுல்லைவாயில் ( வட திருமுல்லைவாயில் )

ஸ்ரீ துரையப்ப சாஸ்தா துணை

திருமுல்லைவாயில்
( வட திருமுல்லைவாயில் )


     தமிழ்  நாட்டில் 274 பாடல் பெற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்கள், அப்பர் , சுந்தரர் , சம்பந்தர், மணிக்கவாசகர் போன்ற சமய குறவர்களால் பாடல் பெற்ற தலங்கள். அவற்றுள் ஒன்று சென்னயில் உள்ள திருமுல்லைவாயில் சிவ ஸ்தலம்.

     இத்திருக்கோயில் தொண்டை நாட்டுத் தலமாகும் . சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில்   தென்   திருமுல்லைவாயில் உள்ளதால்   இது   வடதிருமுல்லைவாயில்   எனப்படுகிறது. (1) சென்னை- ஆவடி சாலையில் திருமுல்லைவாயில்  உள்ளது. (2)   பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயில் அடையலாம். சாலையில் இறங்கி ஊருள் 1 கி.மீ. சென்று கோயிலை அடையலாம். தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் பெயருடையது.

இத்தலம் பற்றிய வரலாறு :
     இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டுவந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் ; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர்.

     (இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு) பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும்.)



     இவர்களைக்காணத் தொண்டைமான் வந்தான். வரும் வழியில் கோழம்பேடுஎன்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்றறிந்துமன்னன் மறுநாள் காலை யானை மீதேறிவந்தான். அவன் வருவதைக்கண்ட அசுரர்களின் குறுநில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர்செய்வதற்குச் சேனைகளைக்கொண்டு வரத்திரும்பினான். அவ்வாறு திரும்பி இம் முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப்

பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது இறைவன் காட்சி தந்து,

மன்னனே ! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான்
மாசு இல்லா மணியே ! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிபெற்று வருவாயாக 
என்று அருள் புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்குநோக்கியுள்ளது). தொண்டைமான்
(நந்தியெம்பெருமானுடன்) வருவதை யறிந்து, ஓணன், காந்தன் 
சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்
தூண்களே இன்றும் சுவாமி சந்நிதியின் முன்னால் உள்ளன. வெங்கலக்கதவும்,பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப் பட்டதாகவும் அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.


திருமுல்லைவாயில் பாடல் - 1



திருவும்மெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்

சீருடைக் கழல்கள்என் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்தும்
ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய
பாசுப தாபரஞ் சுடரே


திருமுல்லைவாயில் பாடல் – 1 – விளக்கம்

தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, வீட்டின்பமும், அதனைத் தருகின்ற மெய்ப்பொருளும், இம்மையிற்பெறும் செல்வமும் எல்லாம் எனக்கு உனது புகழையுடைய திருவடிகளே என்று மனத்தால் நினைத்து, பிறர் ஒருவரையும் துணையாக நினையாது, அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும், அவர்கள் என்னைப் பற்றவரின், பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்; வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற அடியேனாகிய யான் படுகின்ற துன்பத்தை, நீ நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் - 2

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 2 – விளக்கம்

உன் தேவியாகிய கொடிபோலும் இடையினையுடைய உமையவள் கண்டு மகிழுமாறு, பல திறங்களும் கூடிய கூத்தினை, தாளவொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற அழகனே, அரிய வேதத்தின் முடிந்த பொருளாய் உள்ளவனே, கருணையாகிய அழகினையுடைய கண்களையுடையவனே, 'இறைவனே, நீ எங்குள்ளாய்?' என்று தேடிய தேவர்கள், நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழைப் பலவிடங்களிலும் சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன், மேலும் அங்ஙனமே பாடுதற்கு, யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கியருளாய். 

திருமுல்லைவாயில் பாடல் - 3

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழம்அன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் அரசே
தண்பொழில் ஒற்றி மாநக ருடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.


திருமுல்லைவாயில் பாடல் – 3 – விளக்கம்

விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே, மனையாள் கண்டு நடுக்கங் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே, சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்களுக்குத் தலைவனே, தண்ணிய சோலைகளையுடைய திருவொற்றிமாநகரை உடையவனே, சங்கிலியின் பொருட்டு என் கண்ணைப் பறித்துக்கொண்ட செப்பமுடையவனே, உயிர்களைக் திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.



திருமுல்லைவாயில் பாடல் – 4

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 4 – விளக்கம்


பொன்போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில், புள்ளிகளையும், கீற்றுக்களையும் உடைய வண்டுகள் புதிய நறுமணத்தை நுகர்ந்து இசையைப் பாட, அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின்மேல் கிடந்து உறங்குகின்ற நண்டு, அந்த இசை நின்றபொழுது விழித்தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றையுடைய செந்நெல்லையுடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, உனது திருப்புகழை விருப்பத்தோடு, பல நலங்களையும் உடைய தமிழால் பாடுவேனாகிய எனக்கு அருள்செய்யாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 5

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வாயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே

திருமுல்லைவாயில் பாடல் – 5 – விளக்கம்

சந்தன மரத்தின் வேரையும், கரிய அகிலினது கட்டையினையும், மென்மையான மயில் இறகினையும், யானையின் தந்தத்தையும், முத்துக் குவியல்களையும், பவளக் கொடிகளையும் மேல் இட்டுக்கொண்டும், பக்கங்களில் தள்ளியும் வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, மாசில்லாத மணி போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.



திருமுல்லைவாயில் பாடல் – 6

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய
பாசுப தாபரஞ் சுடரே.


திருமுல்லைவாயில் பாடல் – 6 – விளக்கம்


மாற்றாது வழங்கும் வள்ளலே, வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே, திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருப்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, யான் பொய்யையே பேசி, குற்றங்களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின், யான் பெற்ற பேறு, மற்று யார் பெற வல்லார்! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன்; அது, தவறுடைத்தே. ஆயினும், அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின், அடியேன் வேறொரு துணை இல்லேன்; ஆதலின், அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய்.
திருமுல்லைவாயில் பாடல் – 7

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல்அ றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.


திருமுல்லைவாயில் பாடல் – 7 – விளக்கம்

அழகு பொருந்திய சிவந்த வாயினையும், வெள்ளிய பற்களையும், கரிய நீண்ட கூந்தலையும், சிறந்த மயில் போலும் சாயலையும், அணிகலங்கள் பொருந்திய கொங்கைகளையும், அழகிய கயல்போலும் கண்களையுமுடைய ஆடல் மகளிர் அரிய நடனங்களை ஆடுதல் நீங்காததும், செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கும் செல்வனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, இரவும் பகலும் உனக்குத் தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.


திருமுல்லைவாயில் பாடல் – 8

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் றன்னைஆட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 8 – விளக்கம்

யாவராலும் விரும்பத் தக்கவனே, அன்று திருவெண்ணெய்நல்லூரில் வந்து, நாய்போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட சம்புவே, வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற, பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனே, உன்னைத் தேடித் திரிவேனாகிய யான், செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட, பசிய பொன்போல்பவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 9



மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய
பாசுப தாபரஞ் சுடரே.





திருமுல்லைவாயில் பாடல் – 9 – விளக்கம்

தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல், அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை, அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே, செல்வத்தையுடைய திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே, சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 10

சொல்லரும் புகழான் தொண்டை மான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

திருமுல்லைவாயில் பாடல் – 10 – விளக்கம்
சொல்லுதற்கரிய புகழை யுடையவனாகிய, 'தொண்டைமான்' என்னும் அரசன், எல்லையில்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு அவனது யானையை, படர்ந்துகிடந்த முல்லைக் கொடியால் தடுத்து, பின்னர் அவனுக்கு வெளிப்பட்டருளிய இறைவனே, எந்நாளும் நல்லவர்கள் போற்றுகின்ற திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, வெள்ளை விடையை ஏறுபவனே, பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே, உயிர்களைக் காப்பவனே, மேலான ஒளியாய் உள்ளவனே, அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய்.

திருமுல்லைவாயில் பாடல் – 11 – விளக்கம்

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற
செல்வனை நாவல் ரூரன்
உரைதரு மாலைஓர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே.


திருமுல்லைவாயில் பாடல் – 11 – விளக்கம்

நறுமணத்தைத் தருகின்ற தாமரை மலர்மேல்

 இருக்கின்ற பிரமனும், திருமாலும் அச்சங் கொள்ளும்படி, அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய, அலைகளை வீசுகின்ற கடல்நீர் சூழ்ந்த திருமுல்லைவாயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய பாடல்களாகிய பத்தினையும், மனம் குளிர்ந்து பாட வல்லவர்கள், நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி, தேவர்களுக்கு அரசராகும் நிலையை அடைவர்.

1 comment: